Skip to main content

நத்தம் விஸ்வநாதன் மீதான வழக்கு..! சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Case against Natham Viswanathan ..! High Court orders Election Commission to take legal action ..!

 

வேட்பு மனுவில் தகவல்களை மறைத்ததாக நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தால் அதைச் சட்டப்படி பரீசிலிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் நத்தம் விசுவநாதன் போட்டியிட்டு 11,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வேட்பு மனுவில் தகவல்களை மறைத்த நத்தம் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

அதில், நத்தம் விஸ்வநாதன் ரூ. 4.75 கோடி வருமான வரி செலுத்தாதது தொடர்பான வருமான வரி வழக்கு, வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல், ரூ. 279 கோடி ரூபாய் வரி செலுத்தாதது தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு அவரது சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த தகவல்கள் அனைத்தையும் நத்தம் விஸ்வநாதன் தனது வேட்புமனுவில் தெரிவிக்காமல் மறைத்துள்ளதாகவும், இதை சரி பார்க்காமல் தேர்தல் ஆணையம் விஸ்வநாதனை போட்டியிட அனுமதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியுள்ளார். 

 

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க வேண்டும் எனவும், புகார் குறித்து சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு உரிய வாய்ப்பளித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர்.

 

இதுபோன்ற புகார்களில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என பார்க்காமல், சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்