Skip to main content

காளிங்கராயன் வாய்க்கால் டெண்டர் அறிவிப்பை எதிர்த்து வழக்கு! - அரசுத் துறையினரும் ஈரோடு கலெக்டரும் பதிலளிக்க உத்தரவு!

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

Case against Kalingarayan canal tender announcement! - Government Departments and Erode Collector ordered to respond!

 

ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் வாய்க்கால் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணிகளை முடிக்க வேண்டிய காலத்தை, 24 மாதங்களாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை எதிர்த்து, கல்வெட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன் ஆஜரானார். ‘காளிங்கராயன் வாய்க்கால் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் பணிகளைச் செய்வதற்கு மனுதாரருக்கு ஆட்சேபனை இல்லை என்ற போதிலும், அந்தப் பணிகளை முடிக்கவேண்டிய காலம் 24 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டு டெண்டர் வெளியிட்டிருப்பதுதான், விவசாயிகளின் நீர் பெறும் உரிமையைப் பாதிக்கும்.  

 

இந்தப் பணிகள் நடைபெற இருக்கின்ற இந்த இரண்டு வருட காலக்கட்டத்தில், காளிங்கராயன் வாய்க்காலில் நீர்த் திறப்பு இருக்காது என்பதால், அது விவசாயிகளை மிகவும் பாதிக்கும். பணிகளை முடிக்கவேண்டிய காலத்தை குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.  

 

விவசாயிகளுக்குப் பயிர் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம் நீர் திறந்து விடுவதை நிறுத்தக் கூடாது. விவசாயிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். டெண்டர் அறிவிப்பில் பணிகள் முடிக்கப்படுவதற்கான கால அளவு 24 மாதங்கள் என்று குறிப்பிட்டு டெண்டர் நடைமுறையைத் தொடர்ந்தால், அது பாதிப்பினை ஏற்படுத்தும். ஆகவே, அதனை நிறுத்திவைத்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

 

அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், ‘நீர் திறந்துவிடப்படும் காலத்தைத் தவிர, மற்ற நேரங்களில் மட்டுமே பணிகள் செய்துமுடிக்கும் வகையில் அறிவுறுத்தப்படும். இதனால்,  விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாது’ என்று தெரிவித்தார்.
 

cnc

 

இதனையடுத்து, தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலாளர், நீர் மேலாண்மை தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆகியோர், இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்