அமைச்சர் பொன்முடியின் மகன் எம்.பி கவுதம சிகாமணிக்கு எதிரான சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
திமுக அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி மீதான சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு தற்போது எம்.பி, எம்.எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை வரும் செப்.11 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கவுதம சிகாமணிக்கு எதிராக முதன்மை நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். அண்மையில் அமைச்சர் பொன்முடியிடமும் எம்.பி கவுதம சிகாமணியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டது குறிப்பிடத்தகுந்தது.
ஏற்கனவே நேற்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓபிஎஸ் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான வழக்குகளை மீண்டும் மறு ஆய்வு செய்வதில் எந்தவித தவறும் இல்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.