நிலம் பாலைவனமாதலை தடுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு(யுஎன்சிசிடி), அண்மையில் ஈஷா அறக்கட்டளைக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியது. இதையடுத்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், ஜெர்மனியில் உள்ள யுஎன்சிசிடி தலைமையகத்துக்கு நவம்பர் 18ம் தேதி சென்றார். அங்கே, பூமியின் இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக யுஎன்சிசிடி அமைப்பின் நிர்வாக செயலாளர் இப்ராஹீம் தியாவ்வுடன் சத்குரு கலந்துரையாடினார்.
அப்போது காவேரி கூக்குரல் இயக்கம் தொடர்பாக சத்குரு பேசுகையில், “காவேரி கூக்குரல் திட்டமானது அடிப்படையில், கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதியுறும் காவேரி வடிநிலப் பகுதி விவசாயிகளுக்கு பொருளாதார தீர்வாக அமையும். மேலும், சூழலியல் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவில் மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒவ்வொருவரும் அடுத்த 12 ஆண்டுகளில் 2 மரங்கள் நட உறுதியேற்றால் 242 கோடி மரங்கள் நடும் இலக்கை அடைந்துவிடலாம். நம் பிரச்சினைகளும் தீர்வுகளும் தனித்தனியல்ல. அதன் ஒரு அம்சத்தை நாம் பயன்படுத்திக்கொண்டால் அது தீர்வாகிவிடும். அதை நாம் பயன்படுத்தாமல் விட்டால் பிரச்சனையாகிவிடும்” என்றார்.