தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு - வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் கார்கள் குப்பை போல மிதக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீரில் அடித்து செல்லப்பட்ட கார்கள், தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சாலையின் ஓரத்தில் குப்பை போல மிதக்கின்றது. வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையின் ஓரத்தில் தேங்கிய மழை நீரில் கார்கள் மிதக்கும் காட்சிகள் வெளியான நிலையில், பலரும் அங்கு வந்து மிதக்கும் கார்களை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.