சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் 250 பேருக்கு கல்வி உதவித்தொகையும், 349 மகளிருக்கு நவீன தையல் இயந்திரம் உள்ளிட்டவற்றை தமிழக முதல்வர் வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்காகவும் பாடுபடும் இயக்கமாக திமுக உள்ளது. நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரை எல்லா திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தாலும், எல்லா திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை நாம் செய்து கொண்டிருந்தாலும் கல்விக்கும் மருத்துவத்திற்கும் நாம் அதிகமான அக்கறை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. நீட் என்ற தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்பை பெற முடியும் என்ற ஆபத்தான நிலை உள்ளது. ஆகவே அந்த நீட் உடனே அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட்டுக்கு விலக்கு தர வேண்டும் எனத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம், குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.