தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் அருகே காரில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் கார் வெடித்துச் சிதறியதோடு, அது தீயில் எரிந்தும் கருகியது. இந்த விபத்தில் 30- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சாத்தான்குளம் அருகேயுள்ள சிறிய கிராமம் இடைச்சிவிளை. அங்குள்ள குமரன்விளையைச் சேர்ந்த பால கிருஷ்ணன் என்பவர் அருகிலுள்ள நெல்லை மாவட்ட திசையன்விளையிலிருக்கும் அணைக்கரைப் பகுதியில் அரசு உரிமம் பெற்று வாணவெடி மற்றும் கல்வெடி தயாரிப்பு தொழிலைச் செய்து வந்திருக்கிறார். திருமணம், சடங்கு, கோவில் திருவிழா போன்ற முக்கிய விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் பட்டாசு தயாரித்துத் தன்னுடைய காரில் கொண்டு சென்று சப்ளை செய்வது வழக்கம்.
இந்தச் சூழலில் திருமண விழா ஒன்றிற்கு வழங்குவதற்காக சுமார் 30 ஆயிரம் ரூபாய் அளவிலான வாண வெடிகளை தன்னுடைய குடோனிலிருந்து ஏற்றிக்கொண்டு தனது காரில் நேற்று (21/09/2021) அதிகாலை 02.00 மணியளவில் இடைச்சிவிளையிலிருக்கும் தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார். காலையில் வெடிகளை சப்ளை செய்யும் பொருட்டு செல்வதற்காக பட்டாசு வைத்திருந்த காரைத் தனது வீட்டின் முன்பு நிறுத்தி ரிமோட் மூலம் காரின் கதவுகளை மூடியிருக்கிறார்.
அதையடுத்து, அதிகாலை 04.00 மணியளவில் காரின் கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்பதை சோதனை செய்யும் வகையில் வீட்டுவாசலில் நின்றபடி பாலகிருஷ்ணன் ரிமோட்டை இயக்கியதாகத் தெரிகிறது. அது சமயம் காரில் வைத்திருந்த வெடி திடீரென்று பயங்கர சப்தத்துடன் வெடித்ததில் காரும் வெடித்துச் சிதறியதோடு இன்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் சுக்குநூறாகச் சிதறியதோடு காரும் தீப்பற்றி எரிந்து கருகி நாசமாகியது. இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணனின் கை பலத்த சேதமடைந்தது.
இந்த கார் வெடி விபத்தால் அருகிலுள்ள சுமார் 30- க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் வெடிப்பு கீறல் ஏற்பட்டதோடு, அருகிலுள்ள ஒரு வீட்டின் கூரை ஓடுகளும் தூக்கி வீசப்பட்டன. அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தால் அக்கம் பக்க வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் திரண்டிருக்கிறார்கள். தகவலறிந்து ஸ்பாட்டு வந்த மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் சாத்தான்குளம் டி.எஸ்.பி. கண்ணன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பட்டாசு தயாரிப்பாளரான பாலகிருஷ்ணனைக் கைது செய்து, அவரை சிகிச்சைக்காக அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாலகிருஷ்ணன் அரசு அனுமதி பெற்று வாணவெடி தயாரித்து வந்தாலும், அதனை அனுமதியின்றி காரில் கொண்டு வந்து நிறுத்தியபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மேல்விசாரணை நடந்து வருகிறது என்றார் மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார்.
பட்டாசுகளை காரின் சீட்டுக்கடியில் வைத்து கார் கதவுகளை ரிமோட் உதவியுடன் மூடியதுடன் கார் கண்ணாடிகளை காற்று புகாத வண்ணம் அடைத்திருக்கிறார். இதனால் காருக்குள்ளே ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சூடாகியிருக்கிறது. இந்த நேரத்தில் ரிமோட்டை இயக்கியபோது உஷ்ணம் காரணமாக வாணவெடிகள் மொத்தமாக வெடித்து பட்டாசுகள் வெளியே பறந்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறதாகத் தெரிகிறது என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
பட்டாசு வைத்திருந்த கார் வெடித்துச் சிதறி கருகிய சம்பவம் அந்தப் பகுதியில் திகிலைக் கிளப்பியுள்ளது.