
மேட்டூர் அருகே, பெண்ணுடன் முறையற்ற தொடர்பு கொண்டிருந்த லாரி ஓட்டுநரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள பாலவாடியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் பொன்குமார் (வயது 35). கார் ஓட்டுநர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். அதன்பின், பொன்குமார் தன் தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணிடம் பொன்குமாருக்கு தவறான தொடர்பு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதன்கிழமை (மே 4) காலை, பொன்னுசாமி தனது வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது கீழ் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பொன்குமார் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்த மகனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி, கொளத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் பாலவாடி, கொளத்தூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.