தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி சுந்தரி(35), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதையடுத்து அவரை காரில் புதுச்சேரி அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க, குடும்பத்தினர் முடிவு செய்தனர். மேலும், சுந்தரி வீட்டில் தங்கியிருந்த உறவினர் மகளான கும்பகோணத்தை அடுத்த, மணபடையூர் காந்தி வீதியைச் சேர்ந்த, பூமிநாதன் மகள் ஜீவிதாவையும்(19) அழைத்துக் கொண்டு சென்றனர்.
காரை கும்பகோணம் அடுத்த பட்டிஸ்வரம் நடுபடையூரைச் சேர்ந்த பரமசிவன் மகன் பிரேம்குமார்(23) என்பவர் ஓட்டினார். புதுச்சேரி சென்ற அவர்கள் அங்கு உள்ள மருத்துவமனையில் சுந்தரிக்கு சிகிச்சை அளித்துவிட்டு, காரில் ஊர் திரும்பினர்.
நேற்று மாலை 4 மணியளவில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டிக்குப்பம் கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் காரில் பயணம் செய்த ஜீவிதா மற்றும் ஓட்டுநர் பிரேம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுந்தரி படுகாயமடைந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதி மக்களின் உதவியுடன் படுகாயமடைந்த சுந்தரியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த ஜீவிதா, டிரைவர் பிரேம்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வடலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 2 பேர் இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.