அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அலுவலகம் மற்றும் அவரின் உறவினர்கள், உதவியாளர்கள் வீடு என லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டு முறை சோதனையிட்டுள்ளனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி தொடர்பான ரெய்டு குறித்து விவரம் அறிந்தவர்களிடம் கேட்டப்போது அதிச்சியான பல தகவல்கள் கிடைத்தன.
முதல்முறையாக கடந்த ஆகஸ்ட்டில் வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தியபோது, அவருக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துவிட்டது. அதனால் உஷாரான வேலுமணி, மறைக்க வேண்டிய ஆவணங்களை எல்லாம், ஒரு வாகனத்தில் ஏற்றி, அதை எங்கும் நிறுத்தாமல் சுற்றிக்கிட்டே இருக்கச் செய்ததால், ரெய்டுக்குப் போன டீம், பெரிதாக எதையும் கைப்பற்றலை. உடனே, என்னிடம் எதுவும் இல்லை. வேண்டுமென்றே பழிவாங்க இந்த ரெய்டு நடத்தப்பட்டதுன்னு வேலுமணி எகிறிக் குதித்தார். ஆனால் இந்த முறை, அதாவது கடந்த 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி, ரொம்பவும் சீக்ரெட்டா இந்த ரெய்டு ஆபரேசனைக் கையாண்டார்.
இதில், வேலுமணியின் நட்பு வட்டத்தில் இருந்தாலும், சந்தேகப் பட்டியலில் இல்லாத கோவையைச் சேர்ந்த அவரது உதவியாளர் சந்தோஷ் மற்றும் அவர் தொடர்பில் இருக்கும் வழக்கறிஞர் நவீன் ஆகியோரின் வீடுகளுக்குள் ரெய்டு டீம் அதிரடியாகப் புகுந்தது. அங்கேதான் ஆவணப் புதையல்கள் கட்டுக்கட்டாக கிடைத்தன. அவற்றைப் பார்த்த அதிகாரிகளே அதிர்ச்சியில் வாயைப் பிளந்திருக்கிறார்கள்.
காரணம், கிடைத்த ஆவணங்கள் அரசியலையே புரட்டிப் போடக்கூடிய அளவுக்கு முக்கியமானவை. வேலுமணி தொடர்பான சொத்து ஆவணங்களை மட்டும் தேடிப்போன ரெய்டு டீமிற்கு, புதிய புதிய ஆவணங்கள் லட்டு லட்டா கிடைத்திருக்கு. குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி தொடர்பான பல ஆவணங்கள் அதில் இருந்திருக்கு. அதேபோல் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களும் அங்கே இருந்திருக்கு. இதுதவிர ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் தொடர்பான அரிய ஆவணங்களும் கிடைத்திருக்கு. அந்த ஆவணங்களின்படி, நித்தியானந்தா பாணியில் மாலத்தீவு அருகே ஜக்கியும் ஒரு தீவை வாங்கியிருப்பதாக தெரிகிறது.
இதெல்லாம் பிடிபட்டதால் ஷாக்கான வேலுமணி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் சகோதரர் மூலமும், தென் மாவட்ட அமைச்சர் ஒருவர் மூலமும் ஆட்சித் தலைமையிடம் தூதுவிட்டிருப்பதாக பேசப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு சாதகமான சிக்னல் கிடைக்காததால் அவர்களின் பதட்டம் தொடருகிறது என்கிறார்கள்.