அத்திவரதர் தரிசனத்திற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழரசி என்ற மூதாட்டி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் அத்திவரதர் தரிசனத்தை 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடவேண்டும், இந்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அந்த மூதாட்டி உட்பட 10 பேருக்கு அத்திவரதரை தரிசிக்க அனுமதி வழங்கி வழக்கை முடித்து வைத்தனர். அதனையடுத்து ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ராமானுஜ தாசர் என்பவர் மேலும் 10 நாட்கள் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.
அந்த மனு இன்று விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறியிருந்த நிலையில், அந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள். தமிழக அரசும், இந்து அறநிலையத்துறையும் 45 நாட்கள்தான் அத்திவரதர் தரிசனம் என்று ஏற்கனவே முடிவெடுத்த பிறகு இதுகுறித்து அரசிற்கோ, இந்து அறநிலையத்துறைக்கோ நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
அதேபோல் இந்த வழக்கு பொதுநல வழக்குபோல தெரியவில்லை. கடைசி நேரத்தில் இதுபோன்ற வழக்குகளை தொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக தெரிகிறது. இனி இவ்வாறு செய்தால் ஒரு லட்சம் ரூபாயுடன் அபராதம் விதித்து தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தார்.