Skip to main content

காரில் கடத்திவரப்பட்ட  கஞ்சா;  விஏஓ, ஊர்காவல்படை வீரர் உட்பட 3 பேர் கைது

Published on 19/02/2023 | Edited on 19/02/2023

 

nn

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பள்ளிக்கூடங்கள் வரை ஊடுருவிவிட்டது. சில இடங்களில் பள்ளி மாணவர்களே கஞ்சா வழக்குகளில் காவல்நிலையங்களில் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கஞ்சா பயன்படுத்த தொடங்கிய மாணவர்களைத் தொடர்ந்து சில்லறை விற்பனை செய்யவும், வெளியூர்களுக்கு திருட்டு பைக்குகளை கடத்தலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர் கஞ்சா விற்பனை கும்பல்.

 

பல அரசுப் பள்ளி மாணவர்கள் கஞ்சா வாங்குவதற்காக தங்கள் கைகளில் அடையாளத்திற்கு பச்சைகுத்தி வைத்திருப்பதும் வேதனையான சம்பவமாக உள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று அதிகாலை புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் சிவப்பு நிற காரில் கஞ்சா கடத்தி வரப்படும் தகவல் கிடைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சிவப்பு நிற காரில் 1.700 கிலோ கஞ்சா இருந்ததை கண்டெடுத்த போலீசார் காரில் இருந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

 

தொடர்ந்து அவர்களிடம் செய்த விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவர் ஆலங்குடி தாலுகா கோவிலூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெய ரவி வர்மன் (33). இவர் ஏற்கனவே மண், மணல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு துணையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடமாறுதல் செய்யப்பட்டவர் என்பதும், இவரது குடும்பத்தில் சிலர் அரசு பணிகளில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் கடந்த சில மாதங்களாக ஊர்காவல்படையை சேர்ந்த ஆட்டாங்குடி லட்சுமணன் மகன் கணேசன் (45), காரைக்குடி அழகப்பாபுரம் ராசு மகன் சூரிய சந்திரபிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து இரவு நேரங்களில் கஞ்சா கடத்திச் சென்று சில்லறை வியாபாரிகளுக்கு கொடுத்து பணம் பெற்று வந்துள்ளனர்.  வழக்கம்போல் இன்று அதிகாலை மதுரையிலிருந்து சூரிய சந்திரபிரகாஷ் கொண்டு வந்த கஞ்சாவை சில்லறை விற்பனையாளர்களுக்கு கொடுப்பதற்காக 3 பேரும் செல்லும் போது போலீசார் பிடித்துள்ளனர்.

 

பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது செல்போன்கள் மூலம் யாருக்கெல்லாம் பேசியுள்ளனர் என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருவதால் மேலும் பலர் சிக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்