மரைன் போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 76 கிலோ கஞ்சாவை தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
புதன்கிழமை (28.07.2021) நள்ளிரவில் தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல்துறை எல்லைக்குட்பட்ட, கீழவைப்பார் கிராமத்திலிருந்து பைபர் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள கிழக்கு காந்தி நாயக்கர் உப்பளம் அருகில் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதனருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் மூன்று நபர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
வழக்கமான ரோந்து பணிக்காக அந்தப் பக்கம் வந்த மரைன் போலீசார், அந்தக் காரின் அருகில் இருந்தவர்களை அழைத்து விசாரிக்க, அங்கிருந்த நபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொள்ள, காரை திறந்து பார்க்கையில் மூன்று மூட்டைகளில் 76 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக மரைன் போலீசார் குளத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அத்தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 76 கிலோ கஞ்சா, கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், சிக்கிய ஒருவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.