கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பீங்கானாலான அகல்விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தியாகும் அகல்விளக்குகள் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக சிறு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்காக குடும்பங்கள் பிழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட திருக்கோயில்களில், பக்தர்கள் அகல் விளக்கு, கார்த்திகை விளக்கு, குத்து விளக்கு, மண் விளக்கு, உள்ளிட்ட பல்வேறு விளக்குகளால் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற செய்யும் பிரார்த்தனை தடையாவதாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதேபோல் மண்விளக்கு, பீங்கான் விளக்கு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
இதையடுத்து தமிழக அரசு இத்தடையை நீக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் தலைமையில் தீபவிளக்கு உற்பத்தியாளர்கள் அகல் விளக்குடன் விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். தீபமேற்றும் தடையை நீக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தீப விளக்கு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.