தமிழக அரசு பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்ய பல்வேறு நேர்முகத் தேர்வுகளை நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இத்தகைய தேர்வுகளில் முறைகேடுகளும் ஊழல்களும் நடப்பது தவிர்க்க முடியாதவைகளாகிவிட்டன. இந்த சூழலில், நேர்முகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் பாமகவின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்.
தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும்" என்று பதிவு செய்துள்ளார் டாக்டர் அன்புமணி.