பணியில் இருக்கும் வரை காலம் போவதே தெரிவதில்லை. ஆனால் ஒய்வு பெற்ற பிறகு ...? முறையாக கிடைக்க வேண்டிய உதவிகள், பண பலன்களை கேட்டு நடையாய் நடப்பது மட்டுமல்ல போராட்டத்திலும் ஈடுபட வேண்டியிருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்.
ஈரோடு மாவட்டத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஈரோடு கனரா வங்கி பிரதான கிளை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்பிரமணியன், பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்க சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய கனரா வங்கி ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் உதவி தலைவர் காசிவிஸ்வநாதன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒய்வு பெற்றோருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும், 2002ம்ஆண்டு முன்னர் ஒய்வு பெற்ற அனைவருக்கும் 100 சதவீத பஞ்சப்படி வழங்க வேண்டும், அனைத்து வங்கிகளிலும் ஓய்வு பெற்றோர் நலனுக்காக தனியான ஊழியர் நலத்தொகை ஒதுக்கப்பட வேண்டும், ஓய்வூதியோர் குறைகளை தீர்க்க ஒரு உயர்மட்ட தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், அதே போல் வங்கிகளில் ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு மற்றும் மருத்துவமனை கட்டணத்தை வங்கிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற பலரும் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்றும் நிம்மதியில்லாமல் போராட வேண்டியிருக்கிறது.