கரூரில் உள்ள அமராவதி ஆற்றில் சாக்கடை கழிவு நீரை எடுத்துச் செல்ல பொக்லைன் உதவியுடன் தனியாகக் கால்வாய்த் தோண்டுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட நகரப் பகுதிகளிலேயே அமராவதி ஆறு ஒடுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு நீர் வரத்துச் சுத்தமாக நின்று போனதாலும், குடியிருப்புகள் அதிகரித்ததாலும் கழிவுநீர், அமராவதி ஆற்றில் கலந்து ஆறு பாழாகிவிட்டது.
இந்த நிலையில், அமராவதி ஆற்றின் வடக்குப் பகுதியில் சின்னாண்டான் கோவில் பகுதியில் இருந்து லைட்ஹவுஸ் கார்னர் நோக்கி, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பொக்லைன் இயந்திரம் மூலக் சுமார் 15 அடி அகலத்திற்குக் கடந்த 2 நாட்களாக கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. இது எதற்காகத் தோண்டப்படுகிறது என்று அப்பகுதியினர் கேட்டபோது, எந்தப் பதிலும் சொல்லாமல் பொக்லைன் ஓட்டுநர் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, வருவாய்த் துறைக்கும், பொதுப் பணித்துறைக்கும் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிகையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றில் சுமார் 15 அடி அகலத்தில் கால்வாய்த் தோண்டப்பட்டால், அதில் அதிகளவில் சாக்கடை நீர்தான் செல்லும். அவை மேடான பகுதி என்பதால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, ஓரிடத்தில் தேங்கி நிற்கும். அப்படி நின்றால், அதில் கொசு அதிகளவில் உற்பத்தி ஆவதுடன், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் பள்ளமான அக்கரை பகுதியில் தான் செல்லும். அப்போது கால்வாயைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் இவற்றைத் தோண்டக் கூடாது என்றும், பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.