இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த ஜனவரி 31- ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1- ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று (03/02/2022) இரவு மக்களவையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது ராகுல் காந்தி, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிட்டதுடன், தமிழ்நாட்டை உங்களின் வாழ்நாளில் ஆள முடியாது என பா.ஜ.க.வை சாடினார். மேலும் தனது உரையின்போது நீட் விவகாரத்தை எழுப்பிய ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமை பற்றியும் பேசினார். ராகுல் காந்தியின் இந்த உரை, இந்திய அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்து எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (03/02/2022) காலை செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்காக குரல் கொடுத்த ராகுல் காந்தி எம்.பி. தான் தமிழன் எனக் கூறியிருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழன் தமிழன் என்று சொன்னால் ராகுல் காந்தி தமிழன் ஆகிவிடுவாரா? தமிழ் இனத்தையே கொன்று விட்டு தமிழன் என பேசினால் நம்பமாட்டார்கள். தி.மு.க.வுடன் சேர்ந்து தமிழ் இனத்தையே கொன்றவர்கள். வரலாறு மன்னிக்காது; ஒன்றரை லட்சம் தமிழர்களின் ஆத்மா மன்னிக்கவே மன்னிக்காது" என்று கடுமையாக சாடினார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி தந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தமிழன் என்றால் சுயமரியாதை, வீரம், ஈகை மோடியரசிடம், அடிமையாகக் கிடக்கும் அ.தி.மு.க. தமிழன் பற்றியெல்லாம் பேசலாமா? எமது தலைவர் ராகுல்காந்தி பிறப்பால் தமிழராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உணர்வால், உள்ளத்தால் தமிழர். தமிழினத்தின் அடையாளமான சுயமரியாதை, வீரம், ஈகையின் இலக்கணம்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தமிழினம் அன்பைப் பொழிகிறது. அ.தி.மு.க.விடம் இருந்து எமது தலைவருக்கு 'தமிழன்' சான்றிதழ் எதுவும் தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.