ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு துறையின் சார்பில் சென்னையில் இயங்கிவரும் உலகின் தலைசிறந்த மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான பிரேக்குகளை உற்பத்தி செய்யும் டிவிஎஸ் நிறுவனத்தின் சார்பு நிறுவனமான “பிரேக்கஸ் இந்தியா” நிறுவனம் தனது வளாகத் தேர்வினை(campus interview) அண்மையில் நடத்தியது.
ஸ்ரீ நந்தா அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்வளாகத் தேர்வின் துவக்க நிகழ்ச்சியினை ‘பிரேக்ஸ் இந்தியா” நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் லெட்சுமி நாராணயணன் தனது குழுவினர்களுடன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் ஜி. மோகன்குமார் ‘பிரேக்ஸ் இந்தியா” நிறுவனத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வரவேற்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து, பிரேக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் லெட்சுமி நாராணயணன் பேசுகையில், “எங்களது நிறுவனமானது 1981ல் தொடங்கப்பட்டு தற்போது 12 வகையான உற்பத்தி ஆய்வுக்கூடங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றார். இவ்வளாகத் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் நாங்கள் கொண்டு செல்லத் தயாராக உள்ளோம். ஆனால் நல்ல திறமையுள்ள மாணவர்கள் மட்டும் தேவைப்படுவதால் அதற்குரிய தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்க உள்ளோம்.
தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக இக்கல்லூரிக்கு வரும் நோக்கம் யாதெனில், இங்கு பயின்று வரும் மாணவர்கள் நல்ல துடிப்புள்ளவர்களாகவும், தான் ஏற்றுக் கொண்ட பணியினை கண்ணும் கருத்துமாக செய்வதே ஆகும். எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது மலேசியா, சிங்கப்பூர், ஐப்பான் போன்ற நாடுகளில் உள்ள நான்கு சக்கர வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதைக் கூறுவதில் பெருமையடைகிறோம். இவ்வளாகத் தேர்வின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டு கால பயிற்சியும், அதற்குரிய உதவித்தொகையும் வழங்கப்படும்” என்றார்.
பின்னர் மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற்று தனது வேலைவாய்ப்பிற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்கள். இவ்வளாகத் தேர்வினை ஏற்பாடு செய்திருந்த கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலக ஆசிரியர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூ:ர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே. வேலுசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.