குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திவரும் தொடர் போராட்டங்களைத் தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘இந்திய அரசமைப்புச் சட்டம் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த உரிமை வழங்கியுள்ள போதும், அதைத் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு அனுமதியும் இல்லாமல் சில மணி நேரங்களில் ஏராளமானோர் கூடி, சாலை மறியலில் ஈடுபடுவது, சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது அபாயகரமானது. சாலை மறியல் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பிப்ரவரி 14-ம் தேதி முதல் நடந்து வரும் தொடர் போராட்டத்தை சட்டப்படி தடுக்காவிட்டால் நிலைமை கை மீறிச் சென்றுவிடும்.’ என அச்சம் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மார்ச் 11-ம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கையும், நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து மார்ச் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.