என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இந்நிலையில், பாமக சார்பில் என்.எல்.சி நிர்வாகம் தரப்பில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின்போது, பாமகவினர் நடத்திய கல்வீச்சு சம்பவத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் 8 பேரும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 6 செய்தியாளர்களும் காயமடைந்துள்ளனர். மேலும் அவர்கள் கேமரா உள்ளிட்ட ஒளிபரப்புப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் மற்றும் அன்புமணி ராமதாஸைக் கைது செய்ததைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே என்எல்சி நிர்வாகம் விளைநிலங்களைக் கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கல்வீச்சில் 13 அரசுப் பேருந்துகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று நடந்த இந்தப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கடலூரில் மாலை ஆறு மணிக்கு மேல் பேருந்து சேவை இருக்காது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு சென்றடைந்தது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு பேருந்து சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.