அரியலூரில் இருந்து வேணாநல்லூர் செல்லும் டவுன் பஸ் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த பஸ் காட்டுபிரிங்கியம் என்ற ஊர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த கனரக லாரி ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
சம்பவத்தைப் பார்த்த காட்டுபிரிங்கியம் கிராம மக்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர், படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில் ஒரு பெண் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், அவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். மற்றவர்களுக்கு அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.