திருவண்ணாமலையில் இருந்து நேற்று பகல் 11 மணி அளவில் ஒரு தனியார் பேருந்து 50 பயணிகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை சிவா என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், டி.அத்திப்பாக்கம் வனப் பகுதி வழியாக வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றார்.
அந்த சமயம் எதிரே ஒரு இருசக்கர வாகனம் வந்துள்ளது. அதன் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக பேருந்து டிரைவர் சிவா, திடீரென பிரேக் போட்டுள்ளார். மழைக்காலம் என்பதால் பிரேக் சரிவர பிடிக்காமல் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து 50 அடி தூரம்வரை பேருந்து இழுத்துச் செல்லப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த மனோன்மணி என்பவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், பேருந்தில் பயணித்த சம்பத், ராஜேஷ், புஷ்பா, வாசுகி, சக்திவேல் உட்பட 16 பேர் படுகாயங்களுடன் திருக்கோவிலூர் - திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேருந்து விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்தப் பேருந்து விபத்தால், திருக்கோவிலூர் - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.