கன்னியாகுமரியில் மீனவ பெண் ஒருவர், பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் குறவர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பமே பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவரான செல்வமேரி பாட்டியின் அழுகுரல் இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அதற்குள் அதே மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த முதியவர் பெண் மற்றும் சிறுமி ஆகியோர் பயணித்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அவர்களது உடைமைகளைப் பேருந்தில் இருந்து சாலையில் வீசி எறிந்த நடத்துநர், அநாகரிகமான தகாத வார்த்தைகளால் திட்டிய படியே சிறுமியை முதலில் சிறுமியை இறக்கிவிட்டுள்ளார். பின்னர், முதியவரும், பெண்ணும் வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மீனவ பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு முதலமைச்சரே கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர், நடத்துநர், நேர காப்பாளர் ஆகியோர் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனாலும், இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து போக்குவரத்துத்துறை அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.