சென்னை தலைமைச் செயலகத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஊழியர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. மொத்தம் 10 மாடிகள் கொண்ட அந்த கட்டிடத்தில் அரசின் அனைத்து துறைகளின் ஊழியர்கள் சுமார் 2000 பேர் பணியாற்றி வருகின்றனர். முதல் தளத்தில் டைல்ஸில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் இது நில அதிர்வுக்கான அறிகுறி என்றும் தகவல் வெளியானது. இந்த தகவலை நம்பிய பணியாளர்கள் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவசர அவசரமாக பதறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கு வந்த போலீசார் வெளியான தகவல் பொய்யானது. யாரும் அதனை நம்ப வேண்டாம் என மைக் வழியாக அறிவுறுத்தல் கொடுத்தனர்.காவல்துறை அதிகாரி ஒருவர் மைக்கில்,'உங்களோடு தான் நாங்களும் நிற்கிறோம். தயவுசெய்து பணியைத் தொடருங்கள். இங்குள்ள அரசு ஊழியர்களுக்கு அன்பான வேண்டுகோள். நீங்கள் நினைப்பதை போன்று எதுவும் நடக்கவில்லை. கட்டிடம் நல்ல உறுதித் தன்மையோடு இருக்கிறது. தயவுசெய்து வெளியான வதந்தியை நம்பாதீர்கள். அது முழுக்க முழுக்க வதந்தி. தைரியமாக சென்று உங்கள் பணியைப் பார்க்கலாம். எதை வேண்டுமாலும் வாட்ஸப்பில் வதந்தியாக கிளப்பி வருகிறார்கள். நம்ப வேண்டாம்' என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் டைல்ஸ்களில் விரிசல் ஏற்பட்ட பகுதியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், 'தலைமைச் செயலகத்தின் முழு அலுவலகமும் இங்குதான் தான் இருக்கிறது. இதில் முதல் தளத்தில் விவசாயத்துறை செயல்பட்டு வருகிறது. திடீரென்று தரையில் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டது என்ற ஒரு பீதி அலுவலகத்தில் பரவியது. அதனடிப்படையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் கீழ் தளத்திற்கு வந்து விட்டார்கள்.
அலுவலகத்தில் இருந்த எனக்கும் தகவல் தெரிவித்தவுடன் அடுத்த நிமிடமே அங்கு வந்து எங்களுடைய பொறியாளர்களை வைத்து பார்த்ததில் கட்டிடத்தினுடைய உறுதித்தன்மை உருகுலையவில்லை உறுதியாகவே இருக்கிறது. தளத்தில் போடப்பட்ட டைல்ஸ் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இரண்டு அடிக்கு இரண்டு அடி, நான்கு அடிக்கு நான்கு அடி உள்ளிட்ட அளவுகளில் டைல்ஸ் தயார் பண்ணாத காலங்கள் அது. எல்லாம் ஒரு அடிக்கு ஒரு அடி சிறு சிறு டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்ட போது போடப்பட்டது. இதில் நாளாக நாளாக, நடக்க நடக்க உள்ளே ஏர் கிராக் வந்துவிடும்.
இந்த விரிசலைக் கண்டு அச்சப்பட்டு பணியாளர்கள் வெளியேறி விட்டார்கள். சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையின் உடைய தலைமை பொறியாளர், இந்த பகுதியினுடைய நிர்வாக பொறியாளர் அத்தனை பேரும் சோதனை செய்ததில் இந்த கட்டிடம் உறுதி தன்மையோடு இருக்கிறது என்பது தெரிகிறது. இருந்தாலும் துறைக்கு ஆணையிட்டு இருக்கிறேன். இன்றைக்குள் அல்லது நாளைக்குள் எந்த இடத்தில் ஏர் கிராக் வந்திருக்கிறதோ அந்த பகுதியில் உள்ள டைல்ஸை எடுத்துவிட்டு புதிதாக வந்திருக்கக்கூடிய இரண்டு அடிக்கு இரண்டு அடி அளவிலான பெரிய டைல்ஸ்களை பதிக்க உத்தரவிட்டிருக்கிறேன்' என்றார்.