சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (04/08/2021) காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என். நேரு, எம்.ஆர். பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சக்கரபாணி, ஐ. பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரை எப்போது தொடங்குவது, வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை எப்போது தாக்கல் செய்வது, பட்ஜெட்டில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக மொத்தம் உள்ள 36 துறைகளுக்கான ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே நடத்தி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.