தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முத்துலட்சுமி. இவர் கோவிலுக்கு சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கையில் அவரை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்ப முயன்றான்.
சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற அந்த நபர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் உரசியவாறு சென்றார். ஆசிரியர் முத்துலட்சுமி சங்கிலியை பறித்து செல்வதாகக் கத்தி கூச்சலிட்டார். உடனே அந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பின்தொடர்ந்து சென்று பிடித்தார். உடனே அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்பொழுது இந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.