கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ரியாசுதீன் (46). இவர் அதே பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்திவருகிறார். இவருக்கும் இவரது சகோதரர் கமருதீன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி கள்ளக்குறிச்சி வஉசி நகரைச் சேர்ந்த ரிஸ்வானா என்ற பெண், கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே ரியாஸ்தீனுக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்குவதாக கூறி, சம்பந்தப்பட்ட இடத்தை தமக்கு காட்டுவதற்கு வருமாறு செல்ஃபோன் மூலம் ரியாசுதீனை அழைத்துள்ளார்.
அந்த இடத்திற்குச் சென்ற ரியாசுதீனிடம், “சற்று தூரத்தில் பைபாஸ் சாலை அருகில் எனது கணவர் நிற்கிறார். அந்த இடத்துக்கு வாருங்கள்” என்று அவரது காரிலயே அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணின் சைலோ கார் கொஞ்ச தூரம் சென்றதும் அதே காரில் அங்கே காத்திருந்த ஆண்கள் 3 பேர் அந்தக் காரில் ஏறியுள்ளனர். உடனே அவர்கள் ரியாசுதீன் கழுத்தின் மீது கத்தியைவைத்துக் குத்திவிடுவதாக மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனர். அப்படி செல்லும்போது ‘பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது தன்னிடம் பணம் இல்லை என ரியாசுதீன் கூறியுள்ளார் .
உடனே அவரிடமிருந்த மொபைல் ஃபோன், ஏடிஎம் கார்டு, கையில் வைத்திருந்த நான்கு ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்ட அந்தக் கடத்தல் கும்பல், ஃபோன் பே மூலம் இரண்டு லட்சம் பணத்தை தங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்றும், அத்துடன் வரும் 4ஆம் தேதி பகல் 12 மணிக்கு மேலும் மூன்று லட்ச ரூபாயை கொண்டுவந்து தர வேண்டும்’ என்று மிரட்டி ரியாசுதீனை காரிலிருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி மீண்டும் செல்ஃபோனில் ரியாசுதீனை தொடர்புகொண்ட அந்தக் கடத்தல் கும்பல், ஏற்கனவே கடத்தப்பட்ட கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலை அருகே உள்ள ஒரு பேக்கரி கடை முன் நிறுத்தப்பட்டுள்ள ஒரு டிவிஎஸ் மொபட் வண்டியில் தாங்கள் கேட்ட பணத்தை வைத்துவிட்டு அப்படியே சென்றுவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அவர்கள் கூறியபடி அந்த மொபட் வண்டியில் பணத்தை வைத்துவிட்டு, மறைந்திருந்து அந்தப் பணத்தை யார் எடுக்கிறார்கள் என்பதை ரியாசுதீன் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது அண்ணன் மகன் நஸ்ருதீனின் மொபட் வண்டி அது என்பதும், தனது அண்ணன் கமருதீன், அவரது மகன் ஆகிய இருவரும் சேர்ந்து தன்னிடம் பணம் பறிக்க இந்த திட்டம் போட்டிருப்பதை அறிந்துகொண்ட ரியாசுதீன், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்குப் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக மேற்படி கடத்தல் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரியாசுதீனை கடத்திப் பணம் பறித்த சம்பவத்தில் நஸ்ருதீன், அவருக்கு உதவியாக இருந்த மணி, இப்ராஹிம், சுரேஷ், சாகுல், மனோஜ், குமார், நிசார் ஆகிய 7 பேரை கைது செய்துள்ளனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய மொபட் , கார், ஒரு லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய பெண் ரிஸானாவை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக ஒரு கும்பல், பெண்ணை முன்னிறுத்தி கடத்தல் சம்பவம் நடத்தியுள்ளது கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.