![Farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/1ZpanBAFMWuIwX8nSuDzyS_EzUvWhAkpVUWhP7mJt8A/1592476110/sites/default/files/inline-images/607_19.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே நெல்லூர் கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் பால்கீரி கத்தரி, நாட்டுக் கத்தரி, சிம்ரன் கத்தரி, பச்சைக் கத்தரி என வகை, வகையான கத்தரிக்காய்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு காரணமாக விளைவிக்கப்பட்ட கத்தரிக்காய்களை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியாமல் உள்ளூரிலே விற்பனை செய்யும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
35 கிலோ கொண்ட ஒரு மூட்டை கத்திரிக்காய் ரூபாய் 600 முதல் 800 வரை விற்பனையாக வேண்டிய நேரம். ஆனால் தற்போது ஒரு மூடை கத்தரிக்காய் ரூபாய் 100க்கு மட்டுமே விற்பனை ஆகிறது. அதுவும் வண்டி வாடகை, காய் பறிக்கும் கூலி என அனைத்தும் சென்றுவிட ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் மட்டுமே மிஞ்சுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் மாட்டுக்கு தீவனமாக கத்திரிக்காயை போடும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
பல விவசாயிகள் கத்தரிக்காயை பறிக்காமல் நிலத்திலேயே விட்டு வைத்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் எனவும் கத்தரிக்காயை அரசே கொள்முதல் செய்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாட்டினை தோட்டக் கலைத்துறை மூலம் ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.