
ஈரோடு மாநகராட்சி நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட வெண்டிபாளையத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளன. திருச்சி மார்க்கம், சென்னை மார்க்கம் என இரண்டு வழித்தடத்திலும் ரயில் போக்குவரத்து தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இதனால், அடிக்கடி ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்குச் செல்வோர், மருத்துவமனைக்குச் செல்லும் வாகனங்கள், பஸ் போக்குவரத்து என பலதரப்பு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ள பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து போராடினார்கள். சென்ற ஆண்டு வெண்டிபாளையம் முதல் ரயில்வே கேட்டு உள்ள இடத்தில் ஒரு நுழைவு பாலம் அமைக்கப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் செலவில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கிய பணி தற்போது முடிந்துவிட்டது. முறைப்படியான திறப்பு விழா நடக்கும் என அ.தி.மு.க.வினர் கூறி வந்தனர். சென்ற ஒரு மாதம்வரை பொறுத்துப் பார்த்த மக்கள், அந்த நுழைவு பாலத்தை அவர்களாகவே திறந்துவிட்டனர். இப்போது வாகன போக்குவரத்தும் துவங்கிவிட்டது. ஆனால், பஸ் போக்குவரத்து துவங்கப்படவில்லை. இவ்வழியாக, கருமாண்டாம்பாளையம் வரை செல்லும் 30 நம்பர் பஸ், பாசூர் வரை செல்லும் 6ஏ ஆகிய பஸ்கள் ரயில்வே துறை முறைப்படி அனுமதி அளித்த பின்பு இயங்கும் எனக் கூறப்படுகிறது.