கோவை மாவட்டம் தடாகத்தில் செங்கல் சூளையில் கஞ்சா வளர்த்து விற்பனை செய்து வந்த செங்கல் சூளை தொழிலாளி சின்ன காளை என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அடுத்த தடாகம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள கே.என்.என் என்ற செங்கல்சூளையில் பணிபுரியும் தொழிலாளி சின்னக்காளை என்பவர் கஞ்சா செடியை செங்கல்சூளையின் மறைவான பகுதியில் வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சின்னகாளை என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செங்கல்சூளையின் உட்பகுதியில் மறைவான இடத்தில் கஞ்சாசெடியை வளர்த்து வந்ததை காவல் துறையினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், சின்ன காளையிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவ்வப்போது தேவைப்படும்போது கஞ்சா இலைகளை பறித்து காயவைத்து பயன்படுத்திக் கொண்டதும் , கஞ்சா இலைகளை அருகில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சின்னகாளையினை தடாகம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.