Skip to main content

"எங்க அப்பாவை கொன்னுட்டீங்க..." - ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

woman struggle Vellore Collectorate

 

வேலூர் மாவட்டம் அருகே உள்ள ஒதியத்தூர் மலை கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த திங்கட்கிழமை அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது திடீரென காயிதே மில்லத் நினைவு அரங்கம் முன்பு தரையில் அமர்ந்த விஜயலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தர்ணாவில் ஈடுபட்ட விஜயலட்சுமியிடம் "எதற்காக போராட்டம் நடத்துறீங்க, என்ன பிரச்சனைனு சொல்லுங்க தீர்த்து வைக்கிறேன்..." என விசாரித்தார்.  அப்போது விஜயலட்சுமி  “எனது தந்தை பெயரில் கொடுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவில் பல குளறுபடிகள் இருக்கின்றது. அதை சரிசெய்து தருமாறு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார்.

 

இதைக் கேட்ட கலெக்டர்  “மீண்டும் ஒருமுறை மனு தாருங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்” என்றார். அதற்கும் சம்மதிக்காத விஜயலட்சுமி  “என்னால இனிமேல் மனு அளிக்க முடியாது. எனக்கு இப்பவே இதற்கு ஒரு தீர்வு வேண்டும்” என பதிலளித்துள்ளார். உடனே மாவட்ட ஆட்சியரும் தரையில் அமர்ந்து விஜயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் இருந்த ஆவணங்களை வாங்கி சரி பார்த்தார். ஆட்சியர் தரையில் அமர்ந்து குறை கேட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

விஜயலட்சுமியின் நில ஆவணங்களை சரி பார்த்த கலெக்டர்  இது குறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு விசாரணைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனாலும் விஜயலக்ஷ்மி செல்ல மறுத்ததால் அவரை கைது செய்ய உத்தரவிட்ட கலெக்டர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

 

அதன் பிறகு, விஜயலட்சுமியிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயலட்சுமி பேசும்போது “என்னுடைய நிலத்திற்கான பிரச்சனையை தீர்க்க அதிகாரிகள் முன் வரவில்லை. பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் என் தந்தை இறந்தே விட்டார். அவரை கொன்று விட்டீர்கள்” என கண்ணீருடன் கூறினார். இந்த சம்பவத்தால் கலெக்டர் ஆபிஸில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்