சென்னையை அடுத்துள்ள படப்பை பகுதியில் ஜூஸ் கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், ஜூஸ் ஆகியவற்றை ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் உட்பட நான்கு பேரை பணியிடைநீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். ஜெயமாலா என்பவரும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். இவர்கள் இருவர் உட்பட மகளிர் போலீசார் நான்கு பேர் படப்பை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கிருந்த கடை ஒன்றில் பிரட் ஆம்லெட், ஜூஸ் ஆகியவற்றை ஓசியில் தருமாறு கேட்டுள்ளனர்.
தராவிட்டால் கடை உரிமத்தை ரத்து செய்து விடுவோம் என மிரட்டி விட்டுச் சென்றனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் இது தொடர்பாக கடையின் உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பார்வையிட்டதோடு விசாரணை நடத்தி இரவு பணியில் ஈடுபட்ட நான்கு காவலர்களையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.