ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி திடீர் நகரைச் சார்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் சோளிங்கரில் உள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று(1.1.2024) உறவினர் ஒருவரைச் சந்திக்க பத்தாம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகள் பிரியாவை அழைத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். மகளை பைக்கில் உட்கார வைத்து வண்டியை இயக்கிய போது, திருவள்ளுவர் மாவட்டம் ஆர் கே பேட்டை ஒன்றியம் ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சார்ந்த ராஜேஷ், ஸ்ரீ காளிகாபுரத்தில் இருந்து பில்லாஞ்சி வழியாக சோளிங்கர் நகரை நோக்கி காரில் வேகமாக வந்து கொண்டிருந்தார்.
திடீர் நகர் வரும் வழியில் பைக்கில் சங்கர் பிரியா இவர்கள் பைக்கில் ஏறி உட்கார்ந்து நின்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த கார் இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் பின்னாடி உட்கார்ந்திருந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். பிரியாவின் தகப்பனார் சங்கர் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டது. அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் உயர் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை அறிந்த சோளிங்கர் காவல்துறையினர் விரைந்து சென்று பிரியாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கார் ஓட்டுநரான ராஜேஷை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரியாவின் உறவினர்கள் நேற்று நான்கு மணி அளவில் சோளிங்கர் அரசு மருத்துவமனை எதிரே நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பிரியாவின் உயிர் இழப்புக்கும் சங்கரின் இரு கால்கள் துண்டு ஆனதை குறித்தும் இழப்பீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நீண்ட நேரம் போராடியும் சாலை மறியலை கைவிட முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ஒரு கிலோமீட்டர் தூரம் பேருந்துகள் டூவீலர் லாரி உள்பட நின்று விட்டது. அநேக மக்கள் வெளியூர் செல்வதற்காகவும் கோவில் செல்வதற்காகவும் நின்று கொண்டு தவித்துக் கொண்டிருந்தன. இதனால் சோளிங்கரில் பரபரப்பு ஏற்பட்டது.