விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தியேன். இவர் தனது மனைவி பேச்சி செல்வி, மகன்களான சபரிகணேஷ் (9), அபினேஷ் (7) ஆகியோருடன் கோவையில் வசித்துவருகிறார். கார்த்தியேன் தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார்.
மனைவி பேச்சி செல்வியின் பெற்றோர்கள் நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி அருகில் உள்ள பரப்பாடி வேப்பங்குளத்தில் வசித்து வருகின்றனர். எனவே, கரோனா விடுமுறையால், தாத்தா வீட்டிற்குப் பேரன்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே வந்திருக்கின்றனர்.
சென்ற வாரம் பெய்த தொடர் மழை காரணமாக, அங்குள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. அங்கே சிறுவர்கள் இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தின் தண்ணீர் மடை செல்லும் கட்டுமானத்தின் மீது அமர்ந்தபடி சிறுவன் சபரிகணேஷ் துணிக்கு சோப்பு போட்டிருக்கிறான். கை நழுவி சோப்புக்கட்டி தண்ணீரில் விழ, அதை எடுப்பதற்காக நீச்சல் தெரிந்த சபரிகணேஷ் குளத்தில் குதித்திருக்கிறான். ஆனால் திறக்கப்பட்ட மடையின் தண்ணீர் சுழலில் சிக்கிய சிறுவன், மடையில் அடிப்பகுதியில் மாட்டிக் கொண்டான்.
இதைக் கண்டு தம்பி அபினேஷ் கூச்சலிட்டு அழுதிருக்கிறான். சத்தம் கேட்டு அருகிலுள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து சிறுவனைத் தேடியுள்ளனர். ஆனால், அவர்களால் அச்சிறுவனை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. தற்செயலாக வேப்பங்குளம் வந்த தந்தை கார்த்திகேயன் மகனின் உடலைப் பார்த்துக் கதறியழுதிருக்கிறார். சிறுவனின் பரிதாபச் சாவு கிராமத்தையே உலுக்கியிருக்கிறது.
சம்பவ இடத்திற்கு வந்த விஜயாநாராயணம் போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றன.