கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வழியில் உள்ள விஜயமாநகரம் எனும் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நிழற்குடை அமைப்பதற்காக 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமூர்த்தி, குமாரி தம்பதியின் ஒரே மகன் வினோத் (10) அதே கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்த பின்பு சாலையைக் கடந்துள்ளார்.
அப்போது சாலையின் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே வரும் போது எதிர்பாராத விதமாக 10 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். சமீபத்தில் பெய்த கனமழையால் அந்தப் பள்ளத்தில் முழுவதுமாக தண்ணீர் நிரம்பி இருந்ததால் பள்ளத்தில் விழுந்த சிறுவன் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார். அதில் மூச்சுத்திணறி 10 அடி கொண்ட பள்ளத்தின் அடிமட்டம் வரை சிறுவன் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அக்கிராம மக்கள் உடனடியாக சென்று தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு முதலுதவி அளித்தும் எவ்விதப் பயனும் இல்லாமல் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சிறுவனின் உடலை ஒப்படைக்காமல் விருத்தாச்சலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் சிறுவனின் உடலை வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவனின் உயிரிழப்புக்குக் காரணமான நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்ததாரர், கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாக அதிகாரிகள் என அனைவரும் நேரில் வர வேண்டும் என்றும், உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு வருகை தந்த விருத்தாச்சலம் வட்டாட்சியர் தனபதி, உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் ஊர்ப் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது உயிரிழந்த சிறுவனுக்கு உரிய நீதி கிடைக்கும் என உத்தரவாதம் அளித்ததின் பேரில், போராட்டத்தைக் கைவிட்டு சிறுவனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக உறவினர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் அனுமதித்தனர். அதன் பின்பு காவல்துறையினர் சிறுவன் வினோத்தின் உடலை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.
நிழற்குடைக்காகத் தோண்டிய பள்ளத்தில் எவ்வித தடுப்பு வேலிகளோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்காமல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் தங்களின் ஒரே பிள்ளையை இழந்து கதறும் பெற்றோரின் துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.