கரோனா காலத்தில் ஆன்லைனில் படிப்பதற்கு செல்ஃபோன் இல்லாததால், திருடர்களுடன் சுற்றி பிடிப்பட்ட சிறுவனுக்கு, சென்னை திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி புதிய செல்ஃபோனை வாங்கிக்கொடுத்து தவறான பாதையில் செல்ல இருந்த சிறுவனை நல்வழிப் படுத்தியுள்ளார்.
திருவொற்றியூர் பகுதியில், கடந்த வாரம் செல்ஃபோன் திருடும் கும்பலைக் கைது செய்தது காவல்துறை. இந்தக் கும்பலில், 13 வயதுடைய சிறுவனும் இருந்தான். இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி அச்சிறுவனிடம் விசாரித்தபோது, அச்சிறுவன் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் மாநகராட்சிப் பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படித்துவருவதும் தெரிந்தது. மேலும் விசாரித்தபோது, தன் தந்தை மதுக்கு அடிமையானவர் என்றும் கரோனா காலத்தில் ஆன்லைனில் படிக்க செல்ஃபோன் இல்லாதக் காரணத்தினால் இந்தக் கும்பலுடன் சேர்ந்து சுற்றுவதாகவும் தெரிவித்தான்.
இதனைக் கேட்டு வேதனை அடைந்த இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி, தனது சொந்தச் செலவில் செல்ஃபோன் ஒன்றை வாங்கி, அச்சிறுவனுக்கு பரிசாக வழங்கியுள்ளார். அதேநேரம், அந்தச் சிறுவனின் தந்தையை அழைத்துக் கண்டித்துள்ளார். நேற்று மாலை நடந்த இந்நிகழ்வில், வடக்கு மண்டல இணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன், வண்ணாரப்பேட்டை துணை கமிஷ்னர் சுப்புலட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.