தமிழகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும்.
இந்த ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இருக்கிறது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு விரைந்து எடுத்து வருகிறது. அடுத்து வரும் இரண்டு வாரங்கள் மிக முக்கியமான நாட்கள். பொங்களுக்கு அனைவரும் வெளியூர் சென்று திரும்புவதால் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்குமா என்பது அடுத்த இரண்டு நாட்களில் தெரியவரும். முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் ஆக்கிக்கொண்டால் இந்த பாதிப்பில் இருந்து நாம் தற்காத்துக்கொள்ள முடியும். எனவே அதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும். மெகா தடுப்பூசி முகாம்போல வாரம்தோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்" என்றார்.