
கோவை இரயில் நிலையத்திற்கு நேற்று (16.07.2021) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவரிடம் இருந்துவந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் கோவை இரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், துடியலூர் வடமதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் கோவை ரயில் நிலையத்தில் குண்டு வைப்பது குறித்துப் பேசிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ந்த போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் உதவியுடன் கோவை இரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால், சோதனையின் இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது. இதன்பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு பேசிய செந்தில்குமாரை கைது செய்து விசாரித்ததில், கரோனா காரணமாக மனைவி உயிரிழந்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட செந்தில்குமார் இவ்வாறு தெரிவித்தது தெரியவந்தது.