சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (27-12-23)இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தால், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
இதனையடுத்து, அப்பகுதியில் தீப்பற்றி எரிந்து பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில், பாதிப்புள்ளாகிய ஊழியர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சரவணா மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சரவணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியை சுற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால், திடீரென்று எண்ணெய் கசிவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.