கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இளம்பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சி பகுதி, சவாரிமேட்டை சேர்ந்த தங்கராஜ் - கலைவாணி தம்பதியருக்கு விக்னேஸ்வரி, தேவிகா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகள் தேவிகா பிளஸ் ஒன் முடித்துள்ளார்.
தந்தை தங்கராஜ் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு கலைவாணியை பிரிந்து வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. தாய் கலைவாணியுடன் இரண்டு மகள்களும் வசித்து வருகின்றனர். தேவிகா உள்ளூர் இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தேவிகா கடந்த 24 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகாவின் தாய் கலைவாணி புகார் செய்துள்ளார். இந்நிலையில் 26 ஆம் தேதி காலை தேவிகா ஊருக்கு அருகில் உள்ள விவசாய பாசன கிணற்றில் சடலமாக மிதப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து குளித்தலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. சடலமாக கிடந்த தேவிகாவின் இடது கையில் செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளார்.
தேவிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவிகா இறப்பு குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.