புதுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.பி.முத்துக்குமரன் 2011 ல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். பல வருடங்களாக மனைப் பட்டா இல்லாமல் குடியிருந்த நகர கூலித் தொழிலாளர்களுக்கு பட்டா வாங்கிக் கொடுத்து தொகுதி முழுவதும் சுற்றிவந்து மக்கள் குறைகளைக் கேட்டறிந்து சட்டமன்றத்தில் மக்களின் குரலாக கேள்விகளைத் தொடுத்தார். ரத்தினச் சுருக்கமான அவரது கேள்விகளைப் பார்த்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உறுப்பினர்கள் முத்துக்குமரனைப் போல கேள்விகளை கேட்க வேண்டும் என்று கூறி பெருமைப்படுத்தினார். ஒரு வருடத்தில் அதிகமான கேள்விகளைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரையும் பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு நடந்த நேரம், அகில இந்திய தலைவர்கள் எல்லாம் கலந்துகொள்ளும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது என்று மூத்த தோழர் நல்லக்கண்ணுவிடம் கூறிய முத்துக்குமரன் அதற்கான காரணத்தையும் கூறினார். அதாவது ''புதுக்கோட்டைக்கு ஒரு மருத்துவக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேச வேண்டும். இது என் தொகுதிக்கு மட்டுமல்ல புதுக்கோட்டை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு பயன்தரும் திட்டமாக இருக்கும்'' என்று கூறியபோது சரி மக்களுக்காக கேள்வி எழுப்ப செல் என்று தோழர் நல்லக்கண்ணு பதில் கூறியுள்ளார்.
2012 ஏப்ரல் 1 ம் நாள் சொந்த ஊரான நெடுவாசலில் இருந்து அன்னவாசலுக்கு ஒரு தோழரின் இல்ல நிகழ்வுக்காக தனது பொளிரோ காரில் புதிய ஓட்டுநருடன் பயணித்தபோது சித்தன்னவாசல் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் உருண்டு புரண்டதில் மக்கள் தோழர் முத்துக்குமரன் தலை நசுங்கி இறந்திருந்தார். இந்த துக்கச் செய்தி பொய்யாகிவிட வேண்டும் என்று கதறி அழுதனர். முதலமைச்சர் ஜெ. இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் தோழர் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நடந்து சென்றனர்.
இவரது நினைவு நாளில் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதுடன் கிராம இளைஞர்கள் ரத்ததானம், அன்னதானம், வேலைவாய்ப்பு முகாம், மரக்கன்றுகள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு 10 வது ஆண்டு நினைவு நாளான இன்றும் எஸ்.பி.முத்துக்குமரன் அறக்கட்டளை மற்றும் இளைஞர்கள் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.
இந்த தகவல் அறிந்து 35 கி மீ தூரத்தில் உள்ள அரசர்குளம் கிராமத்திலிருந்து ஆசை செந்தில் உள்பட 2 போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்றுசக்கர வாகனத்தில் வந்து ரத்ததானம் செய்தது அனைவரையும் கவர்ந்தது. மாற்றுத்திறனாளிகளான நாங்கள் 19 முறைக்கு மேல் ரத்ததானம் செய்திருக்கிறோம். இப்போது பொதுவுடைமை போராளி முத்துக்குமரன் நினைவு நாளில் ரத்தானம் செய்வதைப் பெருமையாக நினைக்கிறோம். இதே போல அனைவரும் ரத்ததானம் கண் தானம் உடல் தானம் செய்ய முன்வரவேண்டும் என்றனர்.