ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தனி வழியானது மூடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் சுவாமி கோவிலில் உள்ளூர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தனி வழி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமீப காலமாக இந்த வழி அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டதாக குற்றம் சாட்டிய உள்ளூர் பொதுமக்கள், இதனால் தாங்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பினால் மனதை புண்படுத்தும் வகையில் கோவில் பாதுகாவலர்கள் தங்களிடம் நடந்து கொள்கின்றனர் எனவும் குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று சன்னிதானம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு வழி திறக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் அதனைச் சமாளிப்பதற்காக தனி வழி அடைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.