சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கத்தில் ஜி20 தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல், விழாக்குழு செயலாளர் ரமேஷ்குமார், இயக்குநர் அறிவுடைநம்பி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடை மீறி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 40 பேர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.