சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வரும் 28 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார்.
இதையடுத்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் நேற்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், “பெரியார் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அச்சமயம் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து வரக்கூடாது என பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தங்கவேல் மீண்டும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது. அதுசமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின்படி இவ்வலுவலக சுற்றறிக்கை வழியாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மாணாக்கர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனை கருத்தில் கொண்டு மேற்காண் சுற்றறிக்கை நிர்வாகத்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.