பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி தமிழகத்தில் அதிக எம்.பி.க்களை பெற வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்வோம் என்று பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சேலம்-பசுமை சாலை திட்டம் பல கோடியில் வர இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அது ஒரு நல்ல திட்டம். இப்போதே அந்த திட்டத்தை பற்றி ஒருசில குழுக்கள் எதிர்த்து பிரசாரம் செய்ய தயாராகி வருகிறது. அதில் எந்த அளவிற்கு காடுகள் பாதுகாக்கப்பட வேண்டுமோ, எந்த அளவிற்கு மக்களின் நிலங்கள் பாதுகாக்கப்படுமோ, எவ்வளவு குறைவாக பாதிப்பு ஏற்படுத்த முடியுமோ அந்த அளவிற்குதான் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரவேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை ஒரு மாற்றம் வேண்டும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக எம்.பி.க்களை பெற வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்வோம். பா.ஜனதா கட்சி வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு தங்களை பலப்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்த தேசிய தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அடுத்த மாதம் அவர் சென்னை வருகிறார். சென்னையில் பா.ஜனதாவின் வாக்குகளை பலப்படுத்த கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அமித்ஷாவின் வருகை தொண்டர்களுக்கு ஒரு உற்சாகமாக அமையும். இவ்வாறு கூறினார்.