தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் வக்பு வாரிய திருத்த என்னும் பெயரில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு இஸ்லாமியர்களின் வழிபாடு மற்றும் தர்மத்திற்கு பயன்படும் சொத்துக்களை பறிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது என்றும் இதற்காக அமைக்கப்பட்ட உறுப்பினர் குழுவில் உறுப்பினர்கள் கருத்துச் சொல்ல முடியாத சூழலை உருவாக்கி அரசின் எண்ணத்தை மட்டும் பிரதிபலிக்கக் கூடியதாக அந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதை தடுக்கும் வகையில் வக்பு வாரிய திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகமது ஃபஹத் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்ட துணை செயலாளர் சையத் ரிஸ்வான் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் அப்துல் கரீம் கலந்து கொண்டு பேசுகையில் ''வக்பு வாரிய திருத்த சட்டம் என்னும் பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசாங்கம் ஈடுபட உள்ளது.
மேலும் வக்பு வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவது என்பது சங்பரிவாரங்களின் முஸ்லிம் வெறுப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். இஸ்லாமிய மக்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான இயக்க நிலங்கள் பாசிச பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றன. அவற்றை அபகரித்து அதானி, அம்பானி, உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக சதி செய்கிறது'' என்றார்.
திருத்தப்பட்ட வக்ப் வாரிய மசோதாவால் இஸ்லாமிய மக்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படும் அவர்களின் முன்னோர்கள் வழங்கிய சொத்துக்கள் எவ்வாறு ஒன்றிய அரசால் பறிபோக போகிறது என்பது குறித்து விளக்கிப் பேசினார். இந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் சேட்முகமது, மாவட்ட நிர்வாகிகள் அப்துல் அஹத், ரஹ்மத்துல்லா, சையத் ரிஸ்வான், சௌகத் அலி, மகபூப் கான், ரியாஸ், பையர்ஸ்கான், ஜலால் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் அதிகமாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டு வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.