


தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கிடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டும் தருவாயில் உள்ள நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று (31/01/2022) மதியம் 01.30 மணிக்கு பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "அ.தி.மு.க. தலைவர்களுடன் இரண்டு நாட்கள் நடைபெற்றப் பேச்சுவார்த்தைக்கு பின் முக்கிய முடிவை எடுத்திருக்கிறோம். நடைபெறவிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. போட்டியிடும்; அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப் போகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் 10% இடங்களுக்கு மேல் போட்டியிட விரும்புவதால் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் இரண்டு முக்கியமான தலைவர்கள், நான் அதிகமாக நேசிக்கக்கூடிய தலைவர்கள் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் மிகத் தெளிவாக பேசியிருக்கிறோம்.
தேசிய அளவில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடரும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இன்னும் சிறுது நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிட உள்ளோம். தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல; தொண்டர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்துள்ளோம்.
கடினமான சூழலில் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வழி நடத்தினார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டி என்பதால் அ.தி.மு.க.வுடன் முறிவு என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்" எனத் தெரிவித்தார்.