பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து வைக்க அழைப்பு விடுத்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவகாரத்தில் அவசரம் அவசரமாக கவர்னர் தன்னிச்சையாக தலையிட்டு விசாரணைக்காக ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளார். இதனை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. கவர்னர் மீது சந்தேக கறை படிந்துள்ளது அரசியல் கட்சிகள், அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இதற்கு இன்று டுவிட்டர் வழியாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ள பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர்ளில் ஒருவரான எச்.ராஜா என்பவர், திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கலைஞரின் மகளுமான கனிமொழி குறித்து மிக ஆபாசமான முறையில் கருத்து வெளியிட்டுள்ளார். இது திமுகவினரை மட்டும்மல்லாமல், நடுநிலைவாதிகளையும் அதிருப்தியடையவைத்துள்ளன.
இது குறித்து செய்தியாளர்கள் திமுக செயல்தலைவரிடம் இன்று கருத்துக்கேட்டபோது, அவரது அநாகரிகமான கருத்துக்கு பதில் சொல்ல முடியாது என்றார். ஆனால் திமுகவின் எதிர்ப்பு வேறு விதமாக எதிரொலிக்கிறது தமிழகத்தில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மகளிரணியினர் களத்தில் இறங்கியுள்ளனர். திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எச்.ராஜாவின் உருவபொம்மையை திமுக மகளிரணியினர், உருவபொம்மையை செருப்பால், துடைப்பத்தால் அடித்தும், தீவைத்து எரித்து தங்களது எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.
இதேப்போல் வேலூர் மத்திய மா.செவும், எம்.எல்.ஏவுமான நந்தகுமார் தலைமையிலும், இராணிப்பேட்டையில் கிழக்கு மா.செ காந்தி எம்.எல்.ஏ தலைமையில், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி போன்ற பகுதிகளிலும் திமுக மகளிரணியினரும், திமுக நிர்வாகிகளும் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். திடீர் போராட்டத்தால் காவல்துறையினர் உருவபொம்மை எரிப்பை தடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.