பா.ஜ.க. ஆட்சியில் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்ற பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, "பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தில் 95 லட்சம் வங்கிக் கணக்குகள் புதிதாகத் துவங்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் தமிழகத்தில் அதிகம் பேர் மத்திய அரசின் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 30,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.- அ.தி.மு.க. இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறோம். தமிழ்நாடு தேசிய நீரோட்டத்தில் இணைய பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சியில் சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மதுரைக்கு அதிகளவில் வளர்ச்சிக் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. செல்லுமிடமெல்லாம் தமிழ் மொழியின் சிறப்பை மேற்கோள்காட்டி பேசி வருகிறார் பிரதமர் மோடி" என்றார்.
தேர்தல் பரப்புரையின் மூலம் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை ஜெ.பி.நட்டா உறுதிசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.